நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையின் விலை ரூ.3000: அதிர்ச்சி தரும் ஆன்லைன் விற்பனை!
நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையின் விலை ரூ.3000: அதிர்ச்சி தரும் ஆன்லைன் விற்பனை!
தேங்காய் தென் இந்தியர்களின் உணவுப் பொருட்களில் தவிர்க்க முடியாத ஒன்று. நாம் பெரும்பாலான உணவுப் பொருட்களைத் தேங்காய் சேர்த்தே சமைத்து சாப்பிடுகிறோம். தேங்காயாக மட்டுமல்லாமல், இளநீராக பருகியும்,தேங்காயில் இருந்து எடுக்கும் பாலை உணவிலும் சேர்த்துக் கொள்கிறோம். நம்மூரில் சிறிய தேங்காய் பத்து ரூபாய் முதலே விலைக்குக் கிடைக்கிறது.
இப்படியாக பயன்படுத்தப்பட்ட கொட்டாங்குச்சி என அழைக்கப்படும் தேங்காய் சிரட்டைகளை கிராமப் புறங்களில் அடுப்பு எரிக்க பயன்படுத்துவது வழக்கம். நகர்ப்புறங்களில் சிலர் இதனை காப்பிக் கோப்பைகள், அழகுப் பொருட்கள், சட்டைப் பட்டன்கள், பொம்மைகள் என கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் தீமை பற்றிய விழிப்புணர்வால், இவ்வாறு தயார் செய்யப்படும் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இதனைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், கூடுதல் விலைக்கு உலகம் முழுவதும் விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அந்தவகையில், ஆன்லைனில் ஒரு தேங்காய் சிரட்டையின் விலை ரூ.1,300க்கு விற்பனை செய்யப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது.
முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் தான் இப்படி அதிக விலைக்கு தேங்காய் சிரட்டையை விற்பனை செய்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதிலும், தேங்காய் சிரட்டையின் உண்மை விலை ரூ.3 ஆயிரம் என்றும், அதனை சலுகை விலையில், 1 ஆயிரத்து 300 ரூபாய்க்கு தருவதாகவும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தைப் பார்த்த இந்தியர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாம் சாப்பிட்டு விட்டு குப்பை எனத் தூக்கி போடும், இந்த தேங்காய் சிரட்டைகளை இவ்வளவு விலைக்கு விற்கின்றனரே என அவர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் ஒருபடி மேலே போய், ‘நீங்கள் பணக்காரர்கள் ஆக வேண்டுமா? அப்படியென்றால் அமேசானில் சிரட்டை விற்க ஆரம்பித்து விடுங்கள்’ என கிண்டலாக தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் இதே போல், காய்ந்த வரட்டியை அமேசான் அதிக விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தது நினைவுக்கூரத்தக்கது.
ரூ. 300 கோடி வருமானம் தரும் தேங்காய் சிரட்டைகள்:
எரிப்பொருளாக மட்டுமல்லாது, ஐஸ்கிரீம் கப், பவுடர், கலைப்பொருள் தயாரிப்பு, கரி(கார்பன்), பேட்டரி, குருடாயில், நகை வேலைப்பாடு, வெடி மருந்து தயாரிப்பு என 50க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு மூலப்பொருளாக பயன்படுகிறது தேங்காய் சிரட்டை. அதனை எரியூட்டி 'ஆக்டிவேட் கார்பனும் பெருமளவு தயாரிக்கப் பயன்படுகிறது.
ஆக்டிவேட் கார்பனானது குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலை பயன்பாட்டுக்கு பயன்படுகிறது. மாசுக்கட்டுப்பாடு பிரச்சினையால் தமிழகத்தில் பல இடங்களில், ஆக்டிவேட் கார்பன் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது 6 இடங்களில் மட்டுமே இந்தத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
ஆக்டிவேட் கார்பனானது இங்கிருந்து வடகொரியா, ஐரோப்பிய நாடுகள், சீனா, அரேபியா நாடுகள், கனடா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வரும், 2025ம் ஆண்டு வரை இந்நாடுகளின் தேவை அபரிமிதமாக அதிகரித்துள்ளது.
தேங்காய் அதிகம் விளையும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டுமன்றி, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சிரட்டை கொள்முதல் செய்யப்பட்டு, நெகமம் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இந்தத் தொழில் மூலம் பல நுாறு வியாபாரிகள், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தேங்காய் உற்பத்தி குறைந்த காலங்களில், ஒரு டன் சிரட்டை அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய்க்கும், அதிக உற்பத்திக் காலங்களில் ஒரு டன், 9,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில், தினமும், ஒரு கோடி ரூபாய்க்கு தேங்காய் சிரட்டை வர்த்தகம் நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேங்காய் சீசன் காலத்தில், தினமும் 300 லோடு (10 டன் வீதம்) மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
தென்னையின் உப தொழில்களில் ஒன்றான தேங்காய் சிரட்டை வர்த்தகத்தில், ஆண்டுக்கு குறைந்தபட்சம், 300 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது என்கின்றனர் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்.
Comments
Post a Comment