ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு
ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு!
என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே மைசூர் சாண்டல் சோப் தமிழகத்தில் மிகப்பிரபலமானது. அப்போ சோப் பெயர் எனக்கு வாயில் வராது என்பதால், "மணக்கும் சோப்" தான் வேண்டுமென அடம் பிடிப்பேன். இன்னைக்கும் எங்க வீட்டில் மைசூர் சாண்டல் சோப் வாசம் ஒவ்வொருவரது மேனியிலும் வீசும். ஆரம்ப காலத்திலிருந்து மைசூர் சாண்டல் சோப் மட்டுமே போட்டு குளித்து வந்தவர்கள், சும்மா அருகில் வந்தாலே சந்தன மணம் வீசும். நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால், டெஸ்ட் பண்ணி கூட பாருங்க. தப்பே இல்ல. எப்போதுமே இனிமையான உணர்வை கொடுக்க கூடிய இந்திய தயாரிப்பாகும்.
சும்மா ஒரு சோப் என்ற அளவோடு நம்முடைய பார்வையை நிறுத்திக்கொள்கிறோம். ஆனால் முதல் உலகப்போர் காலத்தில் தொடங்கி, இன்று வரை பல சவால்களை கடந்து மைசூர் சாண்டல் சோப் மார்கெட்டில் நிலைத்திருக்கும் வரலாறு பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், Anubha Upadhya என்ற பெண், ட்விட்டரில் மைசூர் சாண்டல் சோப் படத்தை பதிவிட்டு, இதன் வாசனையை நுகர்ந்து பாருங்கள் என்று குறிப்பிட்ட பதிவு உலகம் முழுக்க வைரலானது. அதற்கு பிறகே, தென்னிந்தியாவின் அடையாளமாக ஒரு தயாரிப்பு உருவெடுத்த பின்னணியை பலரும் தேடித்தேடி அறிந்து கொண்டனர்
மைசூர் சாண்டல் ஒரு சோப் என்பதை தாண்டி, கன்னட மக்களின் அடையாளமாக மாறியுள்ளது. மைசூர் சாண்டல் சோப் வரலாறு, முதலாம் உலகப்போர் காலகட்டமான 1916 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. போர் சூழல் நிலவி வந்த வேளையில், மைசூரிலிருந்து சந்தன மரங்களை மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தனர். அந்த நேரம் பார்த்து, மைசூர் மகாராஜா, நல்வாடி கிருஷ்ணராஜா வோடியார், பயன்படுத்தப்படாத சந்தன மரங்களில் இருந்து நறுமண வாசம் கொண்ட எண்ணெய் எடுக்க உத்தரவிட்டார்.
அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில், மைசூர் மகாராஜாவிற்கு, வெளிநாட்டு விருந்தினர் ஒருவர் மூலம் சந்தன சோப் கையில் கிடைத்துள்ளது. அதனை பார்த்த உடனே, திவான் சர் எம். விஸ்வேஸ்வரயாவை அழைத்து, மைசூரில் இதுபோன்ற சோப்புகள் தயாரிக்க ஒரு திட்டத்தை வகுத்து கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாராஜாவின் ஆசைப்படியே, சோப்பு தயாரிக்கும் கலையில் தேர்ச்சி பெற, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் தொழில்துறை வேதியியலாளர்களில் ஒருவரான, சோசலே கரலபுரி சாஸ்திரியை அவர்கள் அனுப்பினர்.
இன்றைக்கு அவர், ‘சோப் சாஸ்திரி’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். சாஸ்திரிக்கு இயற்கையான தாவரங்களில் இருந்து, வாசனை திரவியங்களை பிரித்தெடுப்பதில் ஆர்வம் அதிகம். ஆனால் இங்கிலாந்தில், விலங்கு கொழுப்பில் இருந்து சோப் தயாரித்து வந்ததை பார்த்த சாஸ்திரி, இந்தியர்களின் உணர்வுக்கு ஏற்ப சோப் தயாரிக்க வேண்டுமென திட்டமிட்டார். அந்த நாட்களில், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சோப்புகள் மாட்டிறைச்சி கொழுப்பு கொண்டு தயாரிக்கப்பட்டது.
இருப்பினும், மகாராஜாவின் பார்வையை யதார்த்தமாக மாற்றுவது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. காரணம், இங்கிலாந்தில் உள்ள அதிகாரிகள் தங்களின் சோப்பு தயாரிக்கும் செயல்முறையை சொல்ல மறுத்துவிட்டனர். அதனால் உற்பத்தி செயல்முறையைப் புரிந்து கொள்ள சாஸ்திரி அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. எல்லாம் முடித்து, மைசூர் திரும்பியதும், நகரின் தலைமையிடமான கே.ஆர் சர்க்கிள் பகுதியில் முதல் சோப்பு தொழிற்சாலை நிறுவப்பட்டது.
வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு, முதல் முறையாக சோப்பு 1918 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தயாரிப்பு பிரபலமான பிறகு, ஷிமோகாவில் மற்றொரு ஆலை அமைக்கப்பட்டது. மைசூர் சாண்டல் சோப்பை சந்தையில் ஆடம்பர பொருளாக அறிமுகப்படுத்த சாஸ்திரி விரும்பினர். தங்கத்தை விட மதிப்பு மிக்கதாக காட்ட வேண்டுமென எண்ணி, தங்கத்தை போலவே, கவர் சுற்றப்பட்டு, நகைப்பெட்டி வடிவிலான ஒரு பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்யப்பட்டது.
1980 ஆம் ஆண்டு வாக்கில், இரண்டு சோப்பு ஆலைகள் ஒன்றிணைக்கப்பட்டு Karnataka Soaps and Detergent Limited (KSDL) உருவாக்கப்பட்டது. அரசு பொதுத்துறை நிறுவனங்களில் சீரான இலாபத்தை ஈட்டிய முதல் நிறுவனமாகும். 2015-16 நிதியாண்டில், அதிகபட்ச மொத்த விற்பனை வருவாயை ரூ .476 கோடியாக பதிவு செய்தது. இன்று, பெங்களூரு, மைசூர் மற்றும் ஷிமோகாவில் உற்பத்தி பிரிவுகளையும், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் புதுடெல்லியில் கிளைகளையும் கொண்டுள்ளது. மேற்கு இந்தியாவில், குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இன்னும் பெரிய அளவில் பிரபலமடையவில்லை.
மைசூர் சாண்டல் சோப், அதன் போட்டியாளரான லக்ஸ் மற்றும் சந்தூரைப் போல பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை. லக்ஸ் விளம்பரத்திற்கு மட்டுமே ரூ 2,700 கோடி செலவிடும் நிலையில், வெறும் 5 கோடி ரூபாய் விளம்பரத்திற்கு ஒதுக்கியுள்ளது மைசூர் சாண்டல் சோப் நிறுவனம். அதன் வீடியோ விளம்பரங்களில், “100% தூய சந்தன எண்ணெய் கொண்ட ஒரே சோப்பு” என்ற டேக்லைனை பயன்படுத்துகிறது. தற்போதைய சூழ்நிலையில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதன் நுகர்வோரில் 75 சதவீதம் பேர் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களே உள்ளனர். சந்தனம் குறைந்த அளவு கிடைப்பதும், ஒரு சிக்கலாகு. கடந்த பத்து ஆண்டுகளில் சந்தனத்தின் விலை ஒரு டன்னுக்கு பத்து மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு டன்னுக்கு ரூ40-50 லட்சம் அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது. தன்னை பெரிய பிராண்ட்டாக காட்டிக்கொள்ள, இந்தியாவின் மிக விலையுயர்ந்த சோப்பான மைசூர் சாண்டல் மில்லினியத்தை 2012 ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. சூப்பர் பிரீமியம் சோப்பு 150 கிராம் ரூ 720 விலை நிர்ணயிக்கப்பட்டது. இது இப்போது ரூ810 ஆக உயர்ந்துள்ளது.
மைசூர் சாண்டல் சோப் நிறுவனம் 2018-19 ஆம் ஆண்டில் ரூ 672 கோடி விற்றுமுதல் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் விப்ரோவின் சாந்தூர் ரூ 2,065 கோடி வருவாயைப் பதிவு செய்தது. மைசூர் சாண்டல் சோப் 75 கிராம் மற்றும் 125 கிராம் முறையே ரூ38 மற்றும் ரூ62 க்கு விற்பனையாகிறது. ஆனால் யூனிலீவர் தனது லக்ஸ் மற்றும் கிரீம் சோப்பின் 100 கிராம் அளவை வெறும் ரூ .26 க்கு வழங்குகிறது. இத்தனை போட்டிகளையும் தாண்டி, கன்னட மக்களின் அடையாளமாக பெயர் வாங்கி கொடுத்த மைசூர் சாண்டல் சோப், தமிழக மக்களின் மனங்களிலும், மணம் கமழ நிறைந்துள்ளது.
Comments
Post a Comment