பெட்ரோல் பங்க்கில் உங்கள் பணம் வீணாகாமல் இருக்க இதுதான் வழி... இனி டெய்லியும் இத ட்ரை பண்ணுங்க
பெட்ரோல் பங்க்கில் உங்கள் பணம் வீணாகாமல் இருக்க இதுதான் வழி... இனி டெய்லியும் இத ட்ரை பண்ணுங்க
பெட்ரோல் பங்க்கில் உங்கள் பணம் வீணாகாமல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.
இன்றைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. எனவே கார் அதிக மைலேஜ் கொடுக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். இதற்காக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மற்றும் நிரூபிக்கப்படாத பல்வேறு வழிமுறைகளை கார் உரிமையாளர்கள் பின்பற்றுகின்றனர்.
உண்மையில் உங்கள் காரில் இருந்து அதிக மைலேஜை பெறுவது மிகவும் எளிமையானதுதான். ஒரு சில சிறிய விஷயங்களை நீங்கள் சரியாக பின்பற்றினாலே உங்கள் காரில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் மைலேஜை எளிதாக பெற்று விட முடியும். உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஐடிலிங்:
காரை நீண்ட நேரம் ஐடிலிங்கில் (IDLING) விடுவதை இன்றோடு விட்டு விடுங்கள். கார் நீண்ட நேரத்திற்கு ஐடிலிங்கில் இருந்தால், உண்மையில் நீங்கள் எங்கும் போகாமலேயே வீணாக எரிபொருளை இழந்து கொண்டிருப்பீர்கள். 10 வினாடிகளுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், இன்ஜினை உடனடியாக ஆஃப் செய்து விடுங்கள்.
காரை ஸ்டார்ட் செய்யும் முன்பு முழுமையாக தயாராகி விடுங்கள்:
நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பொதுவாக நாம் காரை ஸ்டார்ட் செய்த பிறகுதான் சீட் பெல்ட் அணிவது, மிரர்களை அட்ஜெஸ்ட் செய்வது போன்ற வேலைகளை எல்லாம் செய்வோம். ஆனால் இவற்றை காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பே செய்து விடுவது நல்லது. இதன் மூலமாக ஓரிரு நிமிடங்கள் கார் ஐடிலிங்கில் இருப்பது தவிர்க்கப்படும். எரிபொருளும் மிச்சமாகும்.
சீரான வேகம்:
கூடுமானவரை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரத்திற்கு சீரான வேகத்தில் காரை ஓட்ட முயலுங்கள். திடீரென ஆக்ஸலரேட்டரை மிதிப்பது பின்னர் உடனடியாக குறைப்பதன் காரணமாக அதிக எரிபொருள் செலவாகும். எனவே சீரான வேகத்தில் நீங்கள் காரை செலுத்தினால், அதிக மைலேஜ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
எந்த வேகம் உகந்தது:
மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டருக்கு இடைப்பட்ட வேகத்தில் பயணம் செய்யும்போதுதான் பெரும்பாலான கார்கள் எரிபொருள் சிக்கனத்தில் சிறந்து விளங்குகின்றன. எனவே கூடுமானவரை இதற்கு மிகாமலும், இதற்கு குறையாமலும் காரை ஓட்டுங்கள். மணிக்கு 80-90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டினால், மைலேஜ் கடுமையாக குறைந்து விடும்.
சரியான டயர் பிரஷர்:
உங்கள் கார் வழங்கும் மைலேஜில் டயர்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட டயர் பிரஷை நீங்கள் பராமரிப்பது அவசியம். இதன் மூலமாக மட்டும் உங்கள் காரின் மைலேஜை 3 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்றால் பார்த்து கொள்ளுங்கள். மேலும் இதன் மூலமாக பாதுகாப்பு மற்றும் டயர்களினுடைய ஆயுட்காலமும் அதிகரிக்கும்.
கிளட்சை அதிகம் உபயோகிக்காதீர்கள்:
கிளட்ச் பெடலை பயன்படுத்தாமல் கியர்களை மாற்றுங்கள் என நாங்கள் கூறவில்லை. தேவையில்லாமல் கிளட்ச் பெடலை பயன்படுத்த வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். ஒரு சிலர் கிளட்ச் பெடல் மீது காலை வைத்து கொண்டே காரை ஓட்டுவார்கள். இது தவறு. தேவைப்படும் நேரங்களை தவிர கிளட்ச் பெடல் மீது காலை வைக்காதீர்கள். எரிபொருள் சிக்கனத்திற்கு இது உதவும்.
தேவையில்லாத பொருட்களை தவிர்த்து விடுங்கள்:
எரிபொருள் சிக்கனம் என வந்து விட்டால், எடைதான் முக்கியமான எதிரி. ஆனால் ஒரு லிட்டருக்கு கூடுதலாக 1 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என்பதற்காக காரில் இருப்பவர்களை கீழே இறங்க சொல்ல முடியாது. எனினும் காரில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றலாம். உங்கள் காரின் பூட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அகற்றி விடுங்கள்.
பிளான் பண்ணி பண்ணுங்க:
ஒரு இடத்திற்கு செல்லும் முன்பாக வழித்தடத்தை கவனமாக தேர்வு செய்யுங்கள். வழித்தடத்தை முன்பே திட்டமிட்டு கொள்வதன் மூலம் நீங்கள் வேறு இடத்திற்கு செல்வது தவிர்க்கப்படும். அதேபோல் எங்கு செல்வதாக இருந்தாலும் கொஞ்சம் முன் கூட்டியே புறப்படுங்கள். நீங்கள் அவ்வாறு கிளம்பிவிட்டால் நிதானமாக இருப்பீர்கள். இதன்மூலம் ஆக்ஸலரேட்டரை தாறுமாறாக மிதிப்பது தவிர்க்கப்படும்.
சர்வீஸ் முக்கியம்:
கார் என்பது ஒரு இயந்திரம்தான். எனவே அதனை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சரியாக சர்வீஸ் செய்ய வேண்டும். அதேபோல் சரியான தரநிலை கொண்ட இன்ஜின் ஆயுளை பயன்படுத்துங்கள். இவற்றை எல்லாம் நீங்கள் செய்தால், பெட்ரோல் பங்க்கில் உங்கள் பணம் வீணாக செலவு ஆவதை கணிசமாக குறைக்க முடியும்.
Comments
Post a Comment