கண்ணீரில் உருவான கண்டுபிடிப்பு..! ஆழ்கடலில் மூழ்கினாலும் ஆளைக் காப்பாற்றலாம்…!! அசத்தும் தமிழ் மாணவர்கள்!
கண்ணீரில் உருவான கண்டுபிடிப்பு..! ஆழ்கடலில் மூழ்கினாலும் ஆளைக் காப்பாற்றலாம்…!! அசத்தும் தமிழ் மாணவர்கள்!
கடலில் மூழ்கி விட்டார்கள்.எவ்வளவு தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அன்றைக்கு முழுக்க அவர்களைப்பற்றியே நினைத்துக் கண்ணீர் சிந்திக் கொண்டு இருந்தார் மாணவர் முகமது சபி. இரண்டு நாட்கள் சென்றன. கடலிலிருந்து கரை ஒதுங்கின அந்த மாணவர்களின் உயிரற்ற உடல்கள் இரண்டும். அந்த சோகத்திலிருந்து மீளாமல் தவித்தார் முகமது சபி.
சென்னை மெரினா கடற்கரையில் மட்டும் எத்தனை பேர் அந்த ஆண்டில் இறந்திருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தார்.கிடைத்த முடிவு அதிர்ச்சியாக இருந்தது. அதுபோல உலகம் முழுக்க என்ன நிலைமை, கடலில் மாட்டிக் கொள்கிறவர்களை மீட்க ஏதாவது கருவிகள் இருக்கிறதா என்று இணையத்தில் தொடர்ந்து தேடினார்; நண்பர்களிடம் உரையாடினார். உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் கடலில் சிக்கிச் சராசரியாக சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர்வரை சாவதுத் தெரியவந்தது. அப்படி சிக்குகிறவர்களைக் காப்பாற்ற இதுவரை எந்தக் கருவியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரியவந்தது. அப்படியொரு கருவியை நாமே வடிவமைத்தால் என்ன என்று மனதில் தோன்றியது. அப்படி ஒரு எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் ‘அட்டானமஸ் பிரவுனிங் ரெஸ்க்யூ சிஸ்டம்’என்கிற கருவி.
சென்னை வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவரான முகமது சபியோடு அஜய் கார்த்திக்,கிஷோர் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் இணைந்து இந்தப் புதிய சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் இந்த சாதனம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.கடற்கரைகளில் உள்ள கலங்கரைவிளக்கம் போன்றதுதான் இந்த சாதனம். இதில் தானியங்கி கேமராவும் குழாய்களில் லைஃப் ஜாக்கெட் எனப்படும் மிதவைகளும் சுருட்டி வைக்கப்பட்டுள்ளன. கடற்கரைகளின் அருகில் இந்தக் கருவியை மின்சார தந்திக் கம்பம் போல நிலை நிறுத்தி விட்டால் போதும், நீருக்குள்ளிருந்து உதவி கேட்டு யாரேனும் கைகளை அசைப்பது தெரிந்தால், இதிலுள்ள ரிஃப்லெக்டர் கருவி அதைக் கவனித்து தானியங்கி கம்ப்ரசருக்கு உத்தரவிடும்.
இதனை அடுத்து காற்றூதி லைஃப் ஜாக்கெட்டைத் தள்ளும். தானியங்கி துப்பாக்கி அதை உள்வாங்கி, நீர்நிலைக்குள் எறியும். அது எவ்வளவு தூரத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதைக் கருவிகளே தீர்மானிக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட லைஃப் ஜாக்கெட்டுகள் இப்படி வீசி எறியப்படும். இந்த லைப் ஜாக்கெட்டுகள் நீரில் விழுந்த உடன் விரிந்துவிடும். கடல்நீரில் ஆபத்தில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள் அவற்றைப் பற்றிக் கொண்டால் மூழ்காமல் கரைக்கு தப்பித்து வந்துவிடலாம்.இந்தக் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஆர்எஸ் மற்றும் சங்கேத ஒலி எழுப்பும் கருவிகளின் வாயிலாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கும் கண்காணிப்பு வாகனத்திற்கும் சிக்னல் அனுப்பப்படும். இது தவிர சுற்றிலும் இருக்கிறவர்களுக்குக் கேட்கும் வண்ணம் அபாயச் சங்கு ஒலியையும் இந்தக் கருவி எழுப்ப ஆரம்பித்து விடும். இதன் மூலம் கடலுக்குள் மாட்டிக் கொண்ட நபர் ஏதாவது ஒரு வகையில் காப்பாற்றப்பட வாய்ப்பு ஏற்படும். தவிர இந்த இடத்தில்தான் அவர் மூழ்கியுள்ளார் என்பதை இந்தக் கருவியின் மூலம் கண்டறிந்து அங்கேயும் அவரைத் தேட முடியும்.
அதுமட்டுமா? கடல் சீற்றம் அதிகமாக இருந்தால் கடலில் குளிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்ய இந்தக் கருவியில் சிவப்பு விளக்கு எரியும். ஜெல்லி மீன் போன்ற ஆபத்தான மீன்கள் கடலில் தென்பட்டால் மஞ்சள் நிற விளக்கு எரியும். எங்காவது ஆமைக் கரை ஒதுங்கி துயரப் பட்டால், அதனைக் காப்பாற்றுவதற்கு பச்சை நிற விளக்கு எரியும்.இப்போதைக்கு இந்தக் கருவியை நீச்சல் குளங்கள் ஏரிகளில் வைத்து சோதனை செய்து இருக்கிறார்கள். அடுத்தது கடற்கரையில் இதை வைத்துப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். “அதற்கு நிறைய செலவு பிடிக்கும். அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்”என்று சொல்லுகிறார்கள் இந்த துடிப்பான இளம் விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்புக்காக சர்வதேச அளவு வரைக்கும் பரிசுகளையும் வென்றிருக்கிறார்கள்!1. கிஷோர் 2. ஜெயஸ்ரீ 3. அஜய் கார்த்திக் 4. முகமது சபி.
Comments
Post a Comment