ஆவடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.பாண்டியராஜன் தனது தொகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், நேற்று காலை 7 மணிக்கு பருத்திப்பட்டு பகுதியில் உள்ள பூங்காவுக்கு சென்று, அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள், இளைஞர்களிடம் வாக்கு கேட்டார்.
அதைத்தொடர்ந்து ராமலிங்கபுரத்தில் உள்ள இஸ்ரேல் தெலுங்கு பாப்டிஸ்ட் சர்ச் தேவாலயத்துக்குச் சென்ற பாண்டியராஜன், அங்கு வழிபாடு முடிந்து வெளியே வந்த கிறிஸ்தவ மக்களிடம் வாக்கு கோரினார். அப்போது, அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், ஆவடி தொகுதிக்கு தான் செய்த முன்னேற்றப் பணிகளையும் எடுத்துக் கூறினார்.
அதேபோல, என்.எம்.ரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம், பட்டாபிராம் கோபாலபுரம் பகுதியில் உள்ள ஏ.சி.சி. பெந்தகோஸ்தே ஆலயத்துக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார். அதையடுத்து ரெட்டிபாளையம், அன்னனூர், புதிய அண்ணாநகர், ஜெயலட்சுமிநகர் உள்ளிட்ட 33 மற்றும் 3-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திருமுல்லைவாயலில் உள்ள அய்யா கோவிலுக்குச் சென்று அய்யாவை வழிபட்டதுடன், அங்கு நடைபெற்ற அன்னதானத்தில் பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து பாண்டியராஜன் உணவு சாப்பிட்டார். அவருக்கு, அய்யா கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருமுல்லைவாயல் விஜயன் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுடன் பாண்டியராஜன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் பிள்ளையார்கோவில் தெரு, ஜீவாநகர், பழைய அக்ரஹாரத் தெரு, ராமதாஸ்நகர் வழியாக கள்ளுக்கடை சந்திப்பு சென்று, அருந்ததிபுரம் அண்ணாநகர் சந்திப்பில் தனது பிரசாரத்தை பாண்டியராஜன் நிறைவு செய்தார்.
முன்னதாக பாண்டியராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க.வினர் பிறரை புண்படுத்தும் விதமாக பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் ஆ.ராசா பேசியிருக்கும் பேச்சு, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தாய்மாரையும் மிகவும் இழிவுபடுத்துவதாக அமைந்துவிட்டது. இது மிகப்பெரிய துஷ்பிரயோகம். முதல்-அமைச்சரின் மறைந்த தாயாரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மு.க.ஸ்டாலின் அளிக்கும் மிகப்பெரிய ஆதரவால்தான் ஆ.ராசா பேசுவதாக தெரிகிறது. இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு ஆ.ராசா பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும். இல்லையென்றால் ஸ்டாலின், ராசாவை அழைத்து தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். முடிந்தால் அந்த தாயின் சமாதிக்குச் சென்று ஒரு சொட்டு கண்ணீராவதுவிட்டு மன்னிப்புக் கோரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment