எய்ம்ஸ்’ அடிக்கல்நாட்டு விழாவுக்கு வந்தபிறகு மீண்டும் மதுரைக்கு வரும் பிரதமர் மோடி: நிதி ஒதுக்காதது பற்றி விளக்கம் அளிப்பாரா?
ast Updated : 29 Mar 2021 07:41 PM
‘எய்ம்ஸ்’ அடிக்கல்நாட்டு விழாவுக்கு வந்தபிறகு மீண்டும் மதுரைக்கு வரும் பிரதமர் மோடி: நிதி ஒதுக்காதது பற்றி விளக்கம் அளிப்பாரா?
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 2ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வருகிறார். இந்நிலையில், அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகளாகியும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது, கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும் என்பது பற்றி விளக்கம் அளிப்பரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு தமிழகத்திற்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை அறிவித்தது
அதன்பின் இடம் ஒதுக்குவதில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இடம் தேர்வாகி கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் பிரதமர் மோடி, மதுரைக்கே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டிச் சென்றார்.
மதுரையுடன் நாட்டின் மற்ற பகுதிகளில் அறிவித்த ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கி கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டது.
அந்த மருத்துவமனைகளுக்கான கட்டுமானப்பணிகள் முடியாவிட்டாலும், மாற்று கட்டிடங்களில் வைத்து மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வகுப்புகளும் தொடங்கி நடக்கிறது.
ஆனால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரமரே நேரடியாக மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டியும், நிதி ஒதுக்கவும், கட்டுமானப்பணி தொடங்கவும் மாநில அரசு அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், மத்திய அரசும் ஜப்பான் நாட்டிடம் விரைவாக கடன் பெற்று கட்டுமானப்பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தி தென்மாவட்ட மக்களிடம் உள்ளது.
மேலும், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் மத்திய அரசு நேரடியாக ஒதுக்காமல் ஜப்பான் நாட்டு நிறுவனத்திடம் இருந்து கடன் பெறவது ஏன் என்றும், அந்த நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் கடன் வழங்க முன் வரவில்லை என்ற தெளிவான விளக்கமில்லாமல் தென் மாவட்ட மக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை விவகாரத்தை மையமாக வைத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதிமுக கூட்டணி மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன.
இது மதுரை மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களும், அதன் வேட்பாளர்களும் பதில் அளிக்க முடியாமல் திணறிடிக் கொண்டிருக்கின்றனர்.
மதுரைக்கு கடந்த வாரம் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் கே.பழனிசாமி, விரைவில் எய்ம்ஸ் கட்டுமானப்பணி தொடங்கப்படும் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து சென்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடி, வரும் 2ம் தேதி மதுரையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வர உள்ளார். இந்த கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மோடி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மதுரை தோப்பூருக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவுக்கு வந்திருந்தார்.
அதன்பிறகு தற்போது மதுரை தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார். அப்போது ‘எய்ம்ஸ்’ அடிக்கல் நாட்டுவிழாவில், ‘‘மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் மகிழ்ச்சி. மத்திய அரசு மக்களுக்குச் சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதற்கு மதுரை எய்ம்ஸ் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும், ’’ என்றார்.
ஆனால், அவர் அடிக்கல் நாட்டிச் சென்ற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தற்போது நிதி ஒதுக்காதது, அதற்கான காரணங்கள், எப்போது நிதி ஒதுக்கி கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்பது குறித்தும், எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்கும் என்ன விளக்கம் அளிக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Comments
Post a Comment