நாடு முழுவதும் 11,700 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
நாடு முழுவதும் 11,700 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-வது அலை மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது. அவற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை தாக்குதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
‘மியூகோமைகோசிஸ்’ எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த நோயாளிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக நீரிழிவு பாதிப்பை கொண்டவர்கள் மத்தியில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.
கொரோனா தொற்றுக்கு அளிக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த பாதிப்பு வருவதாகவும் கூறப்படுகிறது.
பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நோயை அனைத்து மாநில அரசுகளும் பெருந்தொற்றாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 25-ந்தேதி நிலவரப்படி 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பதாக மத்திய மந்திரி சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக 2,859 இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் 2,770 பேருக்கும், ஆந்திராவில் 766 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 752 பேருக்கும், தெலுங்கானாவில் 744 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 701 பேருக்கும், ராஜஸ்தானில் 492 பேருக்கும், கர்நாடகாவில் 481 பேருக்கும், அரியானாவில் 436 பேருக்கும், தமிழ்நாட்டில் 236 பேருக்கும், பீகாரில் 215 பேருக்கும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு மருந்துகள் இல்லை. கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆம்போடெரிசின் பி என்ற மருந்து அளிக்கப்படுகிறது.
இந்த மருந்துக்கு பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நோயாளிகளுக்கு தகுந்தவாறு மருந்தை அளித்து வருகிறது. இந்தியாவில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக அமெரிக்க நிறுவனம் 10 லட்சம் மருந்து குப்பிகளை அனுப்புகிறது.
Comments
Post a Comment