கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதுதான் எங்களது முதல் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதுதான் எங்களது முதல் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
07:25 am May 31, 2021 |
- கோவை: ‘‘தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களது முதல் நோக்கம்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோவையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பார்வையிட்டேன். மருத்துவர்களைபோல் பி.பி.இ. கிட் உடுப்பு அணிந்து, நோயாளிகளை நேரில் பார்த்தேன். அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை சந்தித்து உரையாடினேன். பி.பி.இ. கிட் உடையை போடுவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும். பல மணி நேரம் அந்த உடையை அணிந்துகொண்டு மருத்துவர்களும், செவிலியர்களும் பணிபுரிவது பாராட்டுதலுக்குரியது. அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில், நானும் அந்த உடையை அணிந்து, ஆய்வு மேற்கொண்டேன்.
- கொரோனா பரவலை தடுப்பது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது ஆகியவைதான் முக்கிய குறிக்கோள். இதற்கு முக்கியத்துவம் அளித்து, இந்த அரசு செயல்படுகிறது. கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை 50 ஆயிரம் பேர் என்ற உச்சநிலையை கொரோனா தொட்டுள்ளது. கேரளா மாநிலத்தை பொறுத்தவரை 43 ஆயிரம் பேர் என்ற உச்சநிலையை கொரோனா தொட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை 36 ஆயிரம் பேர் என்ற நிலையிலேயே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையைவிட கோவையில் பாதிப்பு அளவு அதிகமாக இருந்தது. ஆனால், எங்கள் அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கடந்த 2 நாட்களாக தொற்று கொஞ்சம் குறைந்து வருகிறது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருவோர் அதிகம். வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் இந்த பகுதியில் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளது. இப்படி பல காரணங்கள் இதில் அடங்கி உள்ளது. எது காரணமாக இருந்தாலும், கொரோனாவை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதே எங்களது முதல் நோக்கம். அதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு செய்து வருகிறது.கோவையில் 800 படுக்கைகள் உருவாக்கியுள்ளோம். கோவையை பொறுத்தவரை நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று கடந்த 3 வாரங்களில் மட்டும் 1,51,060 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் கோவை புறக்கணிக்கப்பட்டதாக சிலர் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
அப்படி சொல்பவர்களுக்கு நான் அரசியல் ரீதியாக பதில் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் உருவாக்கி வைத்துள்ள உள்கட்டமைப்புகளை அவர்கள் வந்து பார்வையிட்டால் இதுபோன்ற விமர்சனங்களை முன்வைக்க மாட்டார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவை மட்டுமல்ல, எல்லா ஊர்களும் எங்கள் ஊர்தான். நாங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பது இல்லை. நான் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றபிறகு 2-வது முறையாக கோவை வந்து உள்ளேன். நான், பதவி ஏற்கும் முன்பே, நான் சொன்னது போன்று எங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமின்றி ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து, நான் வேலை செய்ய போகிறேன். ஓட்டுப்போட்டவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.
ஓட்டுப்போடாதவர்கள் இவருக்கு ஓட்டுப்போடாமல் விட்டுவிட்டோமே... என வருத்தப்படும் வகையில் எனது பணி இருக்கும். கோவை மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக தமிழகத்தையும் பாதுகாப்பதுதான் எங்களது வேலை. எந்த மாவட்டத்திலும், படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு இப்போது இல்லை. இவ்வாறு அனைத்து வகையிலும் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இதுதவிர, தினமும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். ஒரே நாளில் 1.70 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்கிறோம். இந்தியாவிலேயே அதிக அளவிலான ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை உருவாக்கி வைத்துள்ளோம். இன்னும் கூடுதல் வசதிகளை உருவாக்கி வருகிறோம்.
எனவே, தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களது முதல் நோக்கம். பொதுமக்கள், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். இதுதான் எங்களது ஒரே வேண்டுகோள். அரசும், மக்களும் இணைந்து செயல்பட்டால் கொரோனா மட்டுமல்ல, எந்த நோயையும் எதிர்த்து வெற்றி பெறலாம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதைத்தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்கள் வருமாறு:-
* செங்கல்பட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை மத்திய அரசிடம், தமிழக அரசு குத்தகைக்கு கேட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து ஏதாவது பதில் கிடைத்துள்ளதா?
இன்னும் பதில் வரவில்லை. அந்த ஆலையை மத்திய அரசு நடத்த வேண்டும் அல்லது மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஏனென்றால், கொரோனா 3-வது அலை, 4-வது அலை எச்சரிக்கைக்கு முன்கூட்டியே தயாராக இருக்கவேண்டும் என எங்களது அரசு செயல்பட்டு வருகிறது.
* கடைகளில் பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைக்கும் வகையில், தளர்வுகள் இல்லா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படுமா?
இந்த வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அமல்படுத்தி உள்ளோம். இந்த ஊரடங்கு வெற்றி பெற்றதால்தான் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, அடுத்த ஊரடங்கை அறிவிக்கும்போது நீங்கள் சொல்வதை யோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஓட்டுப்போட்டவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். ஓட்டுப்போடாதவர்கள் இவருக்கு ஓட்டுப்போடாமல் விட்டு விட்டோமே... என வருத்தப்படும் வகையில் எனது பணி இருக்கும்
Comments
Post a Comment