மும்பை: குடும்பச் சண்டை; உயிரிழந்த குழந்தை; தந்தையே ஐஸ்கிரீமில் விஷம் கலந்த கொடூரம்!
இரண்டு நாட்களுக்கு முன் இரவு மொகமத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையால் கடும் ஆத்திரம் அடைந்த மொகமத் தனது குழந்தைகளை கொலை செய்யத் திட்டமிட்டார்.
குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டையில் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். மும்பை மான்கூர்டு பகுதியில் வசிப்பவர் மொகமத் அலி நவுசித். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர் . கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு.
இரண்டு நாட்களுக்கு முன் மொகமத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையால் கடும் ஆத்திரம் அடைந்த மொகமத் தனது குழந்தைகளை கொலை செய்யத் திட்டமிட்டார். இதற்காக வீட்டிற்கு ஐஸ்கிரீம் வாங்கி வந்தார். அந்த ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து குழந்தைகள் சாப்பிடுவதற்காக கொடுத்துவிட்டார். ஏதும் அறியாத அப்பாவி குழந்தைகள் அப்பா ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்திருக்கிறார் என்று ஆசையுடன் சாப்பிட்டனர். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் மூன்று பேரும் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். மூன்று பேரில் 5 வயது அலிஷன் அலி பரிதாபமாக உயிரிழந்துவிட்டான். 7 மற்றும் இரண்டு வயது குழந்தைகள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குழந்தைகளின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மொகமத் அலியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாக்பூரில் கடந்த 25-ம் தேதி இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. அலோக் மதுக்கர் என்பவர் தனது குடும்பத்தினர் 5 பேரை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவி மற்றும் 14 வயது மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த அலோக் தனது 12 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் பக்கத்து வீட்டிற்கு சென்று அங்கு இருந்த தனது அத்தை மற்றும் மைத்துனியையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
Comments
Post a Comment