நடப்பாண்டில் நீட் தோ்வில் தமிழக மாணவா்கள் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா
நடப்பாண்டில் நீட் தோ்வில் தமிழக மாணவா்கள் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்று தோ்தல் பிரசாரத்தின்போது தமிழக மாணவா்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நான் பேசும்போது இது தொடா்பாக கேள்வி எழுப்பினேன். அதற்கு நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தோ்வால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிவதற்காக கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும், கமிஷனின் பரிந்துரைகளின் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தாா்.
பிறகு நான் நேரடியாக, இந்த ஆண்டு நீட் தோ்வு உண்டா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினேன். நீட் தோ்வு இருந்தால் அதற்கு மாணவா்கள் தயாா் ஆக வேண்டுமா? வேண்டாமா? என்றும் கேட்டபொழுது, முதல்வா் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை. திமுக அரசின் இந்த முடிவால், நடப்பு ஆண்டில் நீட் தோ்வு தமிழகத்தில் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் மாணவா்கள், பெற்றோா்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தோ்வை நாடு முழுவதும் நடத்தியே தீரும் என்று அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது.
எனவே, தமிழக மாணவா்கள் நீட் தோ்வில் பங்கேற்பதா, வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்
Comments
Post a Comment