மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் தமிழகம் முன்மாதிரி மாநிலம்

 

மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் தமிழகம் முன்மாதிரி மாநிலம்

தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஜான் ட்ரீஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஜான் ட்ரீஸ், பெல்ஜியம் நாட்டில் பிறந்தவர். இந்திய குடியுரிமை பெற்று கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கிறார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, அவரது பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினராக இருந்தார். 100 நாள் வேலை திட்டம் மற்றும் தகவல் உரிமை சட்டம் போன்ற திட்டங்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர்.
பொருளாதார துறையில் உலக அளவில் நன்கு அறியப்பட்ட ஜான் ட்ரீஸ், ராஞ்சி நகரில் உள்ள குடிசை பகுதியில்தான் வசித்து வருகிறார். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியாசென்னுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்.
தற்போது ‘டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்சில்’ கவுரவ விரிவுரையாளராக உள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள அவர், ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். ஜான் ட்ரீசிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினரானதை எப்படி உணர்கிறீர்கள்?
பதில்:- தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்து எனக்கு போதிய அறிவு இல்லாவிட்டாலும், நான் இந்த வேலையை சில தயக்கங்களுடன் ஏற்றுக்கொண்டேன். ஒரு ஆண்டு காலத்திற்கு உறுப்பினராக சேர ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு அதனை தொடர நல்ல காரணங்கள் இருக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆலோசனை குழு உறுப்பினராக ஆனதன் மூலம் எனது கற்றல் அனுபவத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் நிச்சயம் செய்வேன்.
கேள்வி:- இதற்கு முன்பு நீங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்களா?
பதில்:- நான் 3 அல்லது 4 முறை தமிழகத்திற்கு வந்திருக்கிறேன். ஒரு முறை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் தமிழ் நண்பர் ஒருவருடன் இணைந்து சில நாட்கள் சைக்கிளில் வலம் வந்தேன். எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வட இந்தியாவில் கழித்த எனக்கு, இது மற்றொரு கண் திறக்கும் அனுபவமாக இருந்தது.
இன்னொரு முறை விழுப்புரத்திற்கு வந்தேன். அங்கு 100 நாள் வேலை திட்டம் குறித்த படைப்புகளின் சமூக தணிக்கையில் கலந்து கொண்டேன். தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து சில கள ஆய்வுகளையும் மேற்கொண்டோம்.
கேள்வி:- தமிழ் மக்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?
பதில்:- குறுகிய கால பயணம் என்றாலும், தமிழகத்தில் உள்ள பல விஷயங்கள் என்னை கவர்ந்தன. உதாரணமாக, வட இந்திய மாநிலங்களை விட தமிழகம் மிகச்சிறந்த பொது சேவைகளை கொண்டுள்ளது. கலகலப்பான பள்ளிகள், அங்கன்வாடி மையம் மற்றும் சுகாதார மையங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த சேவைகளை பற்றி தமிழக மக்கள் நிறைய புகார் கூறுகிறார்கள். ஆனால் இந்த புகார்கள் அனைத்தும் அதன் சேவையை மேம்படுத்துவதற்காகத்தான்.
தமிழ் பெண்களின் தன்னம்பிக்கை என்னை மிகவும் ஈர்த்தது.
கேள்வி:- தமிழக மக்களின் வாழ்வாதாரம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- தமிழ்நாட்டின் வாழ்க்கைத்தரம் பல மாநிலங்களை விட சிறந்தது, இருந்தாலும் தமிழகத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் இன்னும் ஏழை மக்கள் உள்ளனர்.
2011-12-ம் ஆண்டு திட்டக்கமிஷன் அறிக்கையின்படி கிராமப்புற தமிழ்நாட்டில் 16 சதவீத குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளன. திட்டக்கமிஷனின் ஓட்டுமொத்த சதவீதத்தில், தமிழகத்தின் வறுமைக்கோடு சதவீதம் மிகக்குறைவு தான்.
மேலும் தமிழகம் நன்கு வளர்ந்த மாநிலம். எனவே இங்கு அனைவரையும் தீவிர வறுமையில் இருந்து பாதுகாக்க முடியும்.
கேள்வி:- தமிழக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்து அறிந்திருக்கிறீர்களா?
பதில்:- மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (ஐ.சி.டி.எஸ்), பொது வினியோக முறை மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள் உள்பட பல திட்டங்களை அறிந்திருக்கிறேன். இதனை காண இன்னும் நான் ஆர்வமாக இருக்கிறேன். இதுபோன்ற திட்டங்களுக்கு இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக இருந்து வருகிறது. பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அறிந்து இருக்கின்றன. சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சி வரலாற்றில் மிக முக்கியமானது.
கேள்வி:- இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு என்ன?
பதில்:- தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம். குறிப்பாக குழந்தை வளர்ச்சி, சுகாதார பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களில் இருந்து அதிக விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் சேவை துறையிலும், உற்பத்தியிலும் தமிழகம் இந்தியாவின் பொருளாதார தலைவனாக மாறி உள்ளது.
சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்தது. ஆனால் இப்போது தமிழகத்தின் வளர்ச்சியை காணும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் தமிழகத்தின் மனித வளம் என நான் நினைக்கிறேன். ஏழை மக்களுக்கான கல்வியின் மூலம் கல்வியின் தரம் இங்கு உயர்ந்து இருக்கிறது.
கேள்வி:- தமிழகம் பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?
பதில்:- கேரளா மற்றும் இலங்கையுடன் சேர்ந்து தமிழகம் பல வழிகளில் இந்தியாவுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறது. அதனால் தமிழகத்தில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பது அர்த்தமல்ல. மிகப்பெரிய ஊழல்கள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினர் மீதான அடக்குமுறை போன்ற பல பிரச்சினைகள் இன்னும் நீடித்து வருகிறது. என்னை பொறுத்தவரை சமூக கொள்கை போன்ற தமிழகம் பாராட்டப்பட்ட துறைகளில் கூட, அது இன்னும் கேரளா மற்றும் இலங்கைக்கு பின்னால்தான் உள்ளது.
கேள்வி:- எப்போது தமிழகம் வருவீர்கள்?
பதில்:- விரைவில் வருவேன் என்று எண்ணுகிறேன்.
இவ்வாறு ஜான் ட்ரீஸ் கூறினார்.

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையின் விலை ரூ.3000: அதிர்ச்சி தரும் ஆன்லைன் விற்பனை!

கிளாமரா...! செக்ஸியா..! க்யூட்டா..! - ஹோ ஹோய்ய்ய்...." - ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!