தமிழகத்தில் புழல் உள்பட 9 மத்திய சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் புழல் உள்பட 9 மத்திய சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை
மதுரை கரிமேடு பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சக்கரவர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள மத்திய சிறை சாலைகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த தமிழக காவல்துறை சார்பில் திட்டமிடப்பட்டது.
இதன்படி இன்று காலை 6 மணி அளவில் 9 மத்திய சிறைகளிலும் ஒரே நேரத்தில் போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலான போலீஸ் படை அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டது.
புழலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகளுக்கு தனித்தனியாக ஜெயில் உள்ளது. பெண்கள் சிறை தனியாக செயல்படுகிறது.
தண்டனை சிறையில் 750-க்கும் மேற்பட்ட கைதிகளும், விசாரணை சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் சிறையில் 100 பேர் உள்ளனர்.
சிறை கைதிகளுக்கு ஜெயிலில் எல்லாம் கிடைக்கிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு புழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலமானது.
அது போன்று சகல வசதிகளுடன் சிறைகளில் கைதிகள் வசித்து வருகிறார்களா? என்பதை கண்டறியும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதே நேரத்தில் சிறையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? கைதிகள் செல்போன் பயன்படுத்துகிறார்களா? என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனை காரணமாக புழலில் 2 சிறை வளாகங்களும் இன்று பரபரப்பாக காணப்பட்டன.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. இங்கு ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் சிறையில் 90 கைதிகள் உள்ளனர்.
இன்று காலை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்தாஸ் தலைமையில் 100 போலீசார் சிறைக்குள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். கைதிகள் அறை, கழிவறை உள்ளிட்ட இடங்களில் புகையிலை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி சோதனை நடத்தப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் இன்று காலை அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50 போலீசார், வார்டன்கள் மத்திய சிறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 7 மணி வரை நடந்தது. சேலம் மத்திய சிறையை பொறுத்தவரை சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பலமுறை சேலம் மத்திய சிறையில் செல்போன், கஞ்சா பொட்டலங்கள் கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தடுப்பதற்காக இன்று சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த சோதனையில் எந்தவித பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
திருச்சி மத்திய சிறையில் 1,200-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று திருச்சி கண்டோன்மென்ட் உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் 120-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சிறைக்காவலர்கள் மத்திய சிறைக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் சமையல் அறை, கழிவறைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சல்லடை போட்டு சோதனை மேற்கொண்டனர்.
கடலூர் மத்திய சிறைச் சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இன்று காலை கடலூர் மத்திய சிறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் போலீசார் சிறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் உள்ளூர் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக சென்று கைதி அறைகளில் சோதனை செய்தனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 1500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர்கள் விஜயகுமார், விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், பத்துக்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
மதுரை கரிமேடு பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சக்கரவர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று சோதனை நடத்தினர்.
கைதிகள் அறைகள், கழிவறை உள்ளிட்ட பகுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. உணவு தயாரிப்பு கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் போலீசாரின் சோதனைக்கு தப்பவில்லை.
வேலூர் ஆண்கள் ஜெயிலில் கைதிகள் 742 பேரும், பெண்கள் ஜெயிலில் 97 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். வேலூர் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment